வியாழன், 18 அக்டோபர், 2018


பிரம்பு மனிதர்கள்

ஆரணிவிளை லாசர் 

 

போக்குவெயில் பலமாக விழுந்து கொண்டிருந்தது. வீட்டு  முற்றத்தில் எப்போதோ நடப்பட்டு, இலைகளும், கிளைகளுமாக வளர்ந்து நின்ற  ஈத்தல் கூட்டத்தின் கரிய நிழல் கிழக்கு நோக்கி நீண்டு படுத்துக் கிடந்தது.
பேரன் சுப்பிரமணி தலையைக் குனிந்தவாறே கைகளைப் பிசைந்து கொண்டு நடந்து வருவதைப் பார்த்த தாத்தன் சரஸ்வதியப்பனுக்கு  புரிந்து விட்டது.
'வட்டிக்காரி  பணம் கொடுத்திருக்க மாட்டா...' என்று.
பேரன்  அவரது முன்னால் வந்து  நின்றான்.   அரும்பு மீசையுடன்,  பச்சை ஈத்தல் கம்பு போல் நெடு நெடுவாய் இருந்தான்.     
"பணம் குடுக்கல்ல இல்லியா..."
"ம்..." தலையசைத்தான் பேரன். முகம் வியர்த்து வாடிப் போயிருந்தது. வெயில் பலமாய் அவன் முகத்தில் விழுந்தது.
ஈத்தல் கூட்ட நிழலில் கவிழ்த்துப் போட்ட கூடையென்றின் மீது அமர்ந்திருந்த தாத்தன் இப்போது பேரனின் கையைப் பிடித்து அருகில்  நிறுத்தினார். நரைத்த தலையுடன் சட்டை அணியாமல் வெற்றுடம்புடன் இருந்த தாத்தனின்  நெஞ்சம் கூடு உலர்ந்து  எழும்புகள் வெளியே தெரிந்து கொண்டிருந்தன. மேல் நோக்கி முறுக்கி விடப்பட்டிருந்த மீசையும் நரைத்து ஒழுங்கற்றிருந்தது.

"ஆயிரம் ரூவா தர அவளால முடியல்ல இல்லியா..." என்றார் பேரனிடம்.
"நேரமே வாங்கின கடன இதுவரை குடுக்கல்லியாம்..."
"அந்தக் கடனையும் சேத்து குடுக்கலாமிண்ணு  தானே சொல்லி விட்டேன்".
"அப்பிடித் தான் கேட்டேன்.. வீட்டுக்குள்ள போய் என்னெல்லாமோ பச்சை பச்சையா சத்தம் போட்டா..."
"பள்ளிக் கூடத்துல கட்டயாக்குமிண்ணு கேக்கல்லியால"
"படிச்சா பாரஸ்டரு   வேலையா தரப்போறானுவண்ணு கேட்கிறா..." 
அதன் பிறகு அவர்  எதுவும் அவனிடம் கேட்கவில்லை. பேச்சை நிறுத்திக் கொண்டவர், இடது கையால் முகவாயைத்  தடவியவாறே பேரனின் முகத்தைப் ஆழ்ந்துப் பார்த்தார்.

'ஒரு ஆயிரம் ரூவா புரட்ட முடியல்ல...' என்றார் தனக்குத்தானே. முகத்தில் ஆற்றாமையும், விரக்தியும் பரவியிருந்தது.

"ரெண்டு பேரும் பேசியதக் கேட்டுக் கிட்டுத்தான் இருந்தன்... அவகிட்ட கடன் கேட்டா தருவாண்ணுதானா பேரன அனுப்பிவிட்டீரு... என்னத்துக்கு இப்பிடி ஒவ்வொருத்தருக்கிட்டயும்  கடங்கேட்டு கொறச்சல் படுகுகீரு.. தேங்கா யாவாரி பணத்தோட வாறேன்னுதானே சொன்னாரு.. வந்திருவாரு"  என்றவாறே  வீட்டுக்குள்ளிருந்து இறங்கி வந்து  தேயிலைக் கப்பை கணவரிடம்  நீட்டினாள் வள்ளிம்மை.

"ஒரு கொறச்சலும் இல்லை. இதுவரைக்கும் படாத கொறச்சலா..." என்று வள்ளியம்மையைப் பார்த்துக் கேட்ட சரஸ்வதியப்பனின் முகம்  சீற்றமடைந்தது.
வள்ளியம்மை அப்புறம் வாய்திறக்கவில்லை. 
"தரலண்ணா அவ வச்சிருக்கட்டு..." என்று மீண்டும் பேச்சைத் தொடங்கிய  சரஸ்வதியப்பன்,  பேரனைப் பார்த்து, "சூரங்குடி தேங்கா யாவாரிக்கு போண் போட்டு நாள காலத்த குட்டையை எடுக்க பணத்தோட வருவாராண்ணு கேளுல..." என்றார்.

சுப்பிரமணி வீட்டுக்குள் சென்று செல்போனை எடுத்து வந்து, சூரங்குடி தேங்காய் வியாபாரியின் எண்ணில் அழைத்தான்... அழைப்புப் போய்க் கொண்டேயிருந்தது. மறுமுனையில் போன் எடுக்கப்படவில்லை. மறுபடியும், மறுபடியும் அழைத்தான். கடைசியாக ஒரு முறை என மீண்டும் அழைத்துப் பார்த்தான். மணிச்சத்தம் நீண்ட நேரம் கேட்டுப் பின்னர் ஓய்ந்தது.

"போண எடுக்காரில்ல..."
"ம்..."

தேயிலைத் தண்ணீர் குடித்து முடிந்திருந்தது.

சுப்பிரமணி  தாத்தனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றான். 
பேரனின் முகத்தைப் பார்க்கத் திராணியற்று  எங்கோ வெறித்துப் பார்த்தார் சரஸ்வதியப்பன்.

இரண்டு மூன்று நாள்களாக  ஆயிரம் ரூபாய்  கதைதான் ஓடிக் கொண்டிருக்கிறது சரஸ்வதியப்பனின் வீட்டில். பேரன் சுப்பிரமணிக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும்.  பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அவனுக்கு, பள்ளியிலிருந்து சுற்றுலா செல்வதற்கு கொடுக்க வேண்டுமாம். ஊட்டியோ, கொடைக்கானலோ சுற்றுலாவாம். சுப்பிரமணி  தாத்தன் சரஸ்வதியப்பனை நச்சரித்துக் கொண்டேயிருக்கிறான். பணம் தாரேன் என்று சொல்லியாகிவிட்டது. இரண்டு நாள்களாக யாரிடமெல்லாமோ கேட்டும், பணத்தைப் புரட்ட முடியவில்லை. இனி  சுற்றுலாவுக்கு போக வேண்டாம் என்று எப்படி சொல்லுவது..? 'குட்டையைப் போட்டு வையும் ரெண்டு நாள்ல வந்திருதேன் என செல்போனில் சொன்ன சூரங்குடி தேங்காய் வியாபாரியை நம்பி கைவசம் இருந்தப் பிரம்புக்  கம்புகளைக் கொண்டு கூடை போட்டு வைத்தாகிவிட்டது. தேங்காய் வியாபாரியைத்தான் இன்னும்  காணவில்லை. செல்போனில் அழைத்தால் பதில் இல்லை. சரஸ்வதியப்பனுக்கு  தன் மீதே வெறுப்பு வந்தது.  என்னப் பிழைப்பு இது; ஒரு ஆயிரம் ரூபாய் கூட புரட்ட முடியாத பிழைப்பு...? என்ற எண்ணம் வந்தது. முட்களோடு மல்லுக்கட்டுவது தான் அவருக்கான வாழ்க்கை. இப்போதெல்லாம் வாழ்க்கை அதைவிட கொடுமையாய் ஆகிவிட்டது.  நான் யார் தெரியுமா... எம்ஜிஆருக்கே மாலை போட்டவனாக்கும் என்ற வீறாப்பெல்லாம் இப்போது எடுபடாது.  ஐநூறு ரூபாய் நோட்டுக்களை கைநிறைய வைத்து, செலவு செய்ததெல்லாம் பழங்கதையாகிவிட்டது. பாரஸ்டு காடர்களையெல்லாம் வரைந்த வரையில் நிறுத்தியதும் கனவு போல் ஆகிவிட்டது.

ரண்டு பிள்ளைகளில் மூத்தது ஆண். அவன் கல்லியாணம் செய்து கொண்டு தொலைவில் உள்ள ஒரு ஊரில் மனைவி வீட்டோடு   செட்டிலாகிவிட்டான். இளையது பெண். காதலித்து கைபிடித்தவனுடன் இரண்டே ஆண்டில் வாழ்க்கை கசந்து விட்டது அவளுக்கு. கைக்குழந்தையோடு தாயின் வீட்டில் தஞ்சம் அடைந்தவள்,  ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இரண்டாம் தாரமாக இன்னொருவனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அவளைக்  கட்டியவனுக்கு  குழந்தையை ஏற்றுக் கொள்ள மனமில்லை. சுப்பிரமணிக்கு அப்போது ஆறு வயது.  சுப்பிரமணிக்கும்  அந்த ஆளைப் பார்த்த போது மிரட்சியாகத்தான் இருந்தது. தாத்தனும், ஆத்தாவும் (பாட்டி) காப்பிக் கடைகளிலிருந்து வாங்கித் தரும், நெய்யப்பமும், அதிரசமும் அவனுக்குப் பிடித்துப்போயிருந்தது. சரஸ்வதியப்பனுக்கும், வள்ளியம்மைக்கும்  சுப்பிரமணி குழந்தையாகிப் போனான்.

குடியிருப்பிலிருந்து 2 மைல் தொலைவில் வடக்கே திருநந்திக்கரையைக் கடந்து சென்றால் காடுதான். காடென்றால் பெரும் காடு. யானையொன்று படுத்துக் கிடப்பது போல் காட்சித் தரும் முகளியடிமலைக் காடு. மூங்கிலும், ஈத்தலும், பிரம்பும், தேக்கும், ஈட்டியும், சந்தனமும், வேங்கையும், மருதுவும், தருவையும் அடைந்து கிடக்கும்  அடர்காடு. மிளாக்களும், நெந்நாய்களும், கரடிகளும், காட்டுப் பன்றிகளும் அலைந்து திரியும் பெருங்காடு. கருந்நிழல் படர்ந்து குளிர்ந்து ஓடும் நந்தியாறும், பஞ்சிலைகளும், சிலோப்பியாக்களும்  துள்ளி மறியும் பன்றிக்குழி ஓடையும், ஆர்ப்பரித்து விழும் அருவிகளும், தேவதைகள் ரகசியமாய் நீராடும் தடாகங்களும் அழகுதான். பாயும் தண்ணீரில்  'கோடைப் பாசனமும்' இல்லாமல் இல்லை. ஊறல் பானைகள் மண்ணுக்குள் புதைந்துக் கிடக்கும். ஈத்தல் கூட்டங்களிடையே யானைகள் புகுந்ததென்றால் எல்லாம் சுபம் தான்.

அப்போதெல்லாம், அதிகாலை நான்கு  மணிக்கே பரபரத்துக் கிடக்கும் திருந்திக்கரை பாலம் முக்கு. அந்த இடத்திற்கு என்ன விஷேசமென்றால்,  காடுகளுக்கும்,  ரப்பர் தோட்டங்களுக்கும், மரச்சீனி கூப்புகளுக்கும் செல்பவர்களுக்கு அது தான் தாவளம். சைக்கிள்களின் கிணிங்....கிணிங்...  மணிச்சத்தம் ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கும். பத்தோ, பனிரெண்டோ காப்பிக் கடைகள் அங்கு இருந்தன. முன்பக்க, மூங்கில் அழிகளுக்கு மத்தியில்  பலகாரக் கண்ணாடிப் பெட்டிகளுடன்,  கரும்புகை படிந்து கிடக்கும் அந்தக்  கடைகளில்  புட்டும், பயிறும், பப்படமும், சாயாவும்  விறுவிறுப்பாய் விற்றுக் கொண்டிருக்கும். சுண்ணாம்புக் கறை படிந்துக்கிடக்கும் முறுக்கான் கடைகளில் யாழ்பாணம் புகையிலையுடன், வெற்றிலை, பாக்கு ஒருபுறமென்றால் மறுபுறம்  பீடிக்கட்டுளும்  விற்றுக் கொண்டிருக்கும்.  பட்டிணிக்காரனின் வயிறு போல் உள்குளிந்திருக்கும் பாலத்தின்  கற்சுவரில், அருவாக்களை உரசிக் கூர்மைப் படுத்தும் சப்தம், கால்வாய்த் தண்ணீரின் சலசலப்பைத் தாண்டிக் கேட்டுக் கொண்டிருக்கும். கிழக்கில் முகளியின் மடியிலிருந்து  சூரியன் எழுந்து  முகம் காட்டும் முன்னர் ஏறக்குறைய எல்லோரும்  எடுத்து வந்திருக்கும் பழங்கஞ்சி  வாளிகளுடனோ இல்லையெனில் இளங்குடி பொட்டலங்களுடனோ  காடேறத்  தொடங்கியிருப்பார்கள்.

காட்டில், பச்சைப் பச்சையாய் இலைகளுடன், சிறு, சிறு கிளைகள் பரப்பி  அடர்ந்து கிடக்கும் ஈத்தல் கூட்டங்கள்.  ஈத்தல்களும், பிரம்புகளும் மூங்கில்களின் குடும்பக்காரர்கள்; ஒன்றுவிட்ட தம்பித் தங்கைகள். வெட்ட வெட்ட மீண்டும் பி்றப்பெடுத்துக் கொள்ளும் புல்லினங்கள்.  ஈத்தல்களை வெட்டுவதற்கு காடர்களின் கெடுபிடியில்லை. கால் கட்டைவிரல் அளவு பருமன் கொண்ட ஈத்தல் கம்புகளை தேடிப்பிடித்து எட்டடியோ, பத்தடியோ நீளத்தில் மூட்டில் வைத்து வெட்டியெடுத்து இலைக் கிளைகளை தறித்து எறிந்துவிட்டு, தனிக் கட்டுகளாக்கி தலைச்சுமடாக எடுத்து  மதியத்திற்கு  முன்பு கரையேறி விடலாம். கட்டுகளை சுமக்க உடலில்  வலுவில்லையெனில், திருநந்திக்கரை பாலத்திலிருந்து, கால்வாயில் போட்டு விட்டு, கரையோரமாக நடந்து குடியிருப்புக்கு அருகில்   கரையேற்றியும் விடலாம்.

குடியிருப்பிலிருந்து  ஆணும், பெண்ணும் சிறிசும், பெரிசும் காடேறும். சரஸ்வதியப்பனுக்கு  நல்லதொரு சுமடு ஈத்தலோ, பிரம்போ  கொண்டுவந்தால் இரண்டு நாள்களுக்கு போதும். மீன் கூடை, மணல் கூடை, ரப்பர் ஓட்டுப்பால் கூடை, உள்ளிக் கூடை, குப்பைக் கூடை,  பஞ்சாரம், கொட்டுலாமி, உரல் தட்டி,  என என்னவெல்லாமோ கூடைகள் வீட்டு முற்றத்தில் பிறந்து குவியும்.  அதுவும் அவர்,  அந்தப் பஞ்சாரக் கூடைகளுக்காய், கம்புகளை அரிவாளால் நீள் வாக்கில் கீறி, கரும் பொழிகளையும், வெள்ளைப் பொழிகளையும் தனித்தனியாக பிரித்தெடுத்து, அடுக்கடுக்காய்,  ஒன்று மாற்றி ஒன்று வைத்து இரட்டை நிறத்தில் பின்னும் அழகே தனிதான். அதுவும்,  பொழிகளை  இடது கால் பெருவிரலுக்குக் கீழே வைத்து வட்டமாய்  சுற்றும் போது சிறுபிள்ளைகள் சிலேட்டில் சூரியனை வரைந்த கணக்குத்தான்.  வள்ளியம்மையும் ஒன்றும் சளைத்தவல்ல, அவளும், அவருக்கு நிகராய் கூடைகளை அழகழகாய் பின்னித்தள்ளுவாள். சரஸ்வதியப்பன் மீன்கூடை செய்தாரென்றால் அத்தனை நேர்த்தி. தலைச் சுமடாகவும், சைக்கிளில்களுமாக  மீன் சுமந்து விற்கும் மீன்காரர்கள் 'அண்ணே ஒரு மீன் குட்டை' எனக் கேட்டு சரஸ்வதியப்பனின் வீட்டை மொய்த்துக் நிற்பார்கள். சரஸ்வதியப்பனின் கையில் பஞ்சமில்லாமல் பணம் புரளும்.

அரேபியாவுக்கு காய்கனிகளை பார்சல் கட்டும்  பழக்கூடைகள், பூங்கொத்து கூடைகள்  கூட படுகிராக்கியாக இருக்கும்.  நின்று நகர நேரமில்லாமல் வேலையிருக்கும் சரஸ்வதியப்பனுக்கு. குடியிருப்பைத் தாண்டி  வெளியாட்களும் காடுகளுக்குச்   சென்று கட்டுக்கட்டாக ஈத்தல் கம்புகளை வெட்டி குடியிருப்பில் கொணடு வந்து விற்பதும் நடந்தது. சரஸ்வதியப்பனின் காட்டில் நல்ல மழை. ஒருமுறை  எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்த போது பிரசார மேடையில், குடியிருப்பில் கூடுதல் வசதி கேட்டு மனுவோடு அவருக்கு மலர் மாலையும் அணிவித்தார் சரஸ்வதியப்பன். எம்ஜிஆருக்கு மாலை அணிவித்த மகிழ்ச்சி சொல்லவா வேண்டும்...? 'நான் எம்ஜிஆருக்கே மாலை போட்டவனாக்கும்...' என்று அடிக்கடி சொல்லிக் கொள்வதில் அவருக்கு தயக்கம் ஒன்றும் இல்லை. வள்ளிம்மை கூட எம்ஜிஆர் ரசிகை தான்.  ஊரில்  பத்மநாபா தியேட்டரிலோ, சென்ட்ரல் தியேட்டரிலோ எம்ஜிஆர் படம் வந்ததென்றால் வள்ளிமைக்கு இருப்பு வராது. அவளுக்கு முதல் காட்சி பார்த்தாக  வேண்டும். பட போஸ்டர்களும், பசை வாளியுமாய்  சைக்கிள்களில்  போஸ்டர் ஒட்டச் செல்பவர்களிடம் 'ஓய்.. என்னப் படம்...'  என்றுக் கேட்பதற்கு அவளுக்கு கூச்சம் ஒன்றும் இல்லை. அதே வள்ளியம்மை ஒரு கட்டத்தில் 'நான் எம்ஜிஆருக்கே மாலை போட்டவனாக்கும்...' என்று சரஸ்வதியப்பன் சொல்லும் போது,  'என்னத்துக்கு இப்பிடி தம்பட்டம் அடிக்கீரு, சும்மா இரியும்...' என்று  சலித்துக் கொள்வாள்.

ஒருகட்டத்தில்,  சொல்லி வைத்து போல மீன் வியாபாரிகள்  மீன் கூடைகள் வாங்க வருவதை நிறுத்திக் கொண்டனர்.  தலைச் சுமையாய், தொங்கும் காதுகள் கொண்ட வட்டக் கூடைகளில்  தண்ணீர் ஒழுக  மீன்களை சுமந்து கொண்டு ஊர் ஊராய்  ஓடி,  மீன்விற்றவர்களுக்கு,  சைக்கிள்களில் பெட்டிக் கூடைகளை வைத்துக் கொண்டு துறைக்கும், கடைக்குமாய் அலைந்தவர்களுக்கு, எம்- எயிட்டி  மோட்டார் சைக்கிள்களும், பிளாஸ்டிக் கூடைகளும் வந்த பிறகு ஈத்தலோ, பிரம்போ வேண்டாதததாகிவிட்டது.  ஆறுகளில் மூச்சடக்கி  மணல் அள்ளியவர்களை அரசாங்கம் துரத்திய போது மணல் கூடைகளை வாங்கிச் செல்வதற்கும் ஆட்களில்லை. எல்லாம் பிளாஸ்டிக்கும், எவர் சில்வரும்  ஆகிப்போனதில் கொட்டுலாமியும், பஞ்சாரமும், பூக்கூடையும் யாருக்கு வேண்டும்...?  வெயிலில் போட்ட ஈத்தல்  கம்புகளைப் போல் சரஸ்வதியப்பனின்  வாழ்க்கை உலரத் தொடங்கியது.

வள்ளியம்மை,  மணல் கூடையும், கொட்டுலாமியும்,  பஞ்சாரமும் ஒன்றுக்கு மேல் ஒன்றாய் அடுக்கி,  இடுப்பில் பிடித்துக் கொண்டு ஊர் ஊராய் அலைந்து விற்கத் தொடங்கினாள். பொழுதுசாயும் போது ஏதோ ஒன்றோ, பாதியோ விற்றிருக்கும்.

ப்போதெல்லாம் சரஸ்வதியப்பன் ஈத்தல் கம்புகளைக்  கையில் தொடுவதில்லையென்றாகி விட்டது. கூடை பின்னுவதென்றால்,  அது பிரம்புக் கம்பில் தான் என்று வந்துவிட்டார்.  தேங்காய் கூடைகளுக்கு ஒன்றும் இரண்டுமாக ஆர்டர்கள் வருகின்றன.  ஈத்தாமொழியோ, சூரங்குடியோ, ராஜாக்கமங்கலமோ, தெங்கப்புதூரோ, மணவாளக்குறிச்சியோ என எங்காவது  தொலைவில் இருந்து தேங்காய் வியாபாரிகள் வருகின்றனர். பிரம்புக் கூடைகள் தான் வேண்டும் அவர்களுக்கு.  மூன்றடி வட்டத்தில், வாய்ப்பகுதியில் தடித்தப் பிரம்பு வைத்து வட்டச் சுற்றுப் போட்டு செய்தால்  குலைந்து போகாமல் மாதக்கணக்கில் தாக்குப்பிடிக்கும் பிரம்புக் கூடைகள். பிரம்புக் கூடைகளுக்கு ஆயிரத்து ஐநூறு வரை விலை உண்டு.

அடர்காடுகளில், பிரம்புக் கம்புகளை வெட்டி எடுப்பது அவ்வளவு எளிதான விஷயமா என்ன?  அத்தனை எளிதில் பிரம்புக் கூட்டங்களின்   அருகில் போய்விடத் தான்  முடியுமா..? நீண்ட  இலைகளில், தையல் ஊசிகளைப்  போல் முட்களை வைத்துக் கொண்டு நெடு, நெடுவாய்  இருபது அடி,  முப்பது அடி உயரத்திற்கு வளர்ந்து, மரங்களின் கிளைகளில்  பற்றிப்  பிணைந்து கிடக்கும் பிரம்புக் கம்புகள். பற்றுக் கிளைகள் கிடைக்காத கம்புகள், தரையில் சாய்ந்து  வெளி தேடி, சாரைப் பாம்புகளைப் போல் நீண்டு படுத்துக் கிடக்கும். மூட்டுப் பகுதி புதர்களை வெட்டி ஒதுக்கி, விளைந்தக் கம்புகளை கண்டுபிடித்து அருவாவை ஓங்கிப் போட்டால் அவை துண்டாகி விடும்.  அப்புறம் பலம் கொண்டு  இழுத்து  எடுத்துவிடலாம்.  கைகளில்,   தோளில், முகத்தில், முதுகில்,  முட்கள் பதம் பார்க்கவும் செய்யும்.  காந்தல்  கண்ணீரை வரவழைக்கும். இதற்கொல்லாம் மேலாக  பிரம்பு  வெட்டுவற்கு கடும் கெடுபிடி.  ஈத்தல் கம்புகளை வெட்டுவதைப் போல் பிரம்பு வெட்டுவதை காடர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதில்லை.  காடர்களுக்கு பல நேரங்களில் ஏதாவது சில்லறை கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் அருவா பறிபோகும். ரேஞ்ச் ஆபிசுக்கு பிடித்துச் செல்லப்பட்டு அபராதம் செலுத்த வேண்டியதும் வரும். மேல் அதிகாரிகள் பிடித்துச் சென்றார்களென்றால் விஷயம் இன்னும் சிக்கலாகிவிடும்.

சரஸ்வதியப்பன், விடுமுறை  நாள்களில் சுப்பிரமணியையையும் காட்டுக்கு அழைத்துச் செல்வதுண்டு. பிரம்பு வெட்டவதற்கு பக்கத்துணையாய் இருப்பான் சுப்பிரமணி. கூடவே அவனும் ஒரு சுமடு பிரம்பு தயார் செய்து விடுவான். கம்புகளை  வெட்டும்போது,    
'முள்ளு தேகத்தில படாம பாத்துக்கல...' என்பார் சரஸ்வதியப்பன்.

ஒரு நாள், "தாத்தா இந்த பெரம்புக் கூட்டம் மட்டும் ஈத்தலப் போல முள்ளிலில்லாம இருந்தா எவ்வளவு ஈசியா  இருக்கும்...?" என்று கேட்டான் சுப்பிரமணி.

"அதுதாம்பில பெரம்பு... நல்ல பொருளெல்லாம் ஈசியா.. சுளுவுல கெடைக்குமா என்ன..? பெரம்புகிட்டயிருந்து நாம படிக்க வேண்டிய  பாடங்கதான் எத்தனை இருக்கு..? தேன் கூட்டைப் போலயில்லையா பெரம்புக் கூட்டமும்... தேன் கூட்டுக்கு  தேனீக்களைப்   போல பெரம்புக்கு முள்ளிலைகள் காவல்.   ஈத்தல் கம்புகளை ஈசியா  வெட்டுலாம்.. பெரம்ப அப்பிடி வெட்ட முடியுமா..? பாத்து வெட்டல்லயிண்ணா முள்ளு குத்தி பெரும்பாடாயிருமில்லியா.. ஈத்தல் கம்ப வெயில்ல போட்டா ஒணங்கி ஒண்ணுக்கும் ஆகாதப் போயிரும்... ஆனா, பெரம்பு அப்பிடியா...? கஸ்டமும், வேதனையும்  அனுபவிச்சாதான் நல்ல விஷயங்கள் கைக்கு வரும்.  பொறுமையும், புத்திச்சாலித் தனமும் உனக்கும், எனக்கும், எல்லாருக்கும்  வேணும்.. அவரசப்பட்டா ஆபத்துதான். ஏன் உனக்க  அம்மாவுக்க நிலையப் பாத்தியா" என்று நீட்டி முழங்கினார்.

சுப்பிரமணி பதில் எதுவும் பேசவில்லை. அவன் அம்மாவுக்கு இப்போதும் அடியும் உதையும் கிடைக்கிறது என்பது அவனுக்குத் தெரியாமலில்லை.

கைகளைப் பிசைந்து கொண்டு நின்றான் சுப்பிரமணி. வெயில் நன்றாகத் தாழ்ந்திருந்தது. முற்றத்து ஈத்தல் கூட்டங்களின் இலைகள் காற்றில் சலசலத்து ஆடிக்கொண்டிருந்தன.

சரஸ்வதியப்பனுக்கு தன்மீதான கோபம் தலைக்கேறியது. திரும்பத் திரும்ப ஒரு ஆயிரம் ரூபாய் கூட   புரட்ட முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டேனே என்ற எண்ணம் அவருக்குள் மேலோங்கியது. யாருக்கெல்லாம் உதவியிருக்கிறேன்... இப்போது கடன் கேட்கச் சென்ற வட்டிக்காரிக்குக் கூட எத்தனை உதவிகள் செய்திருக்கிறேன்... என்ற நினைப்பும் வந்தது. முகத்தில் சீற்றம் அதிகரித்து. அருவாவை எடுத்து அப்படியே தனது சங்கை அறுத்துக் கொண்டால் என்ன என்று கூட தோன்றியது அவருக்கு.

வள்ளியம்மை, அவரது முகத்தைப் பார்த்து சீற்றத்தைப்  புரிந்து கொண்டாள்.

"இந்த வீட்டுல பணம் இல்லாம் கஷ்டப்பட்ட நாளு இதுக்கு முன்னயும் வரலில்லயா... எதுக்கு இப்பிடி ஆத்திரப்படுகிறீரு.. ஏன், ஒரு வாரத்துக்கு முந்தி  கூட வீட்டுல  இருந்த ரெண்டு  அருவாவுல ஒண்ணக்  வித்து செலவு செய்யலில்யா..  பித்தளைப் பூணு போட்டு  கைக்கு  தோதாயிருந்த அருவாயில்லியா  அது...?" என்றவள்,
"லே மக்கா.. பள்ளிக்கூடத்துல டூருக்கு பணம் குடுக்கிறதுக்கு நாளைக்குத் தான், கடைசி நாளா...?" என்று சுப்பிரமணியைப் பார்த்துக்  கேட்டாள். அவள் கடந்த  இரண்டு நாள்களில் அவனிடம் இப்படிக் கேட்பது இது நான்காவது முறை.

"ம் நாள உச்சைக்குள்ள..."  என்று தலையசைத்தான் சுப்பிரமணி.

அவள் அவனது கையைப்பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்று
"நாளை உச்சைக்குள்ள எப்பிடியாவது பணத்தைப் புரட்டியிருலாம்... இல்லையிண்ணா ஆத்தா பள்ளிக்கூடத்துக்கு வந்து வாத்தியாருக்ககிட்ட  சொல்லலாம்..." என்றாள்.

பின்னர் வெளியே வந்தவள், "ஒரு கெட்டு பெரம்புக் கம்பு இருந்தாகக் கூட இங்க காலனியில யாருக்காவது விற்று பணத்தைப் பொரட்டியிருக்கலாம்.... இல்லையிண்ணா செஞ்சு வச்சுருக்க இந்தப்  பெரம்புக்  குட்டையை நாள காலம்பொற இங்க யாருக்காவது கொறஞ்ச விலைக்கு விற்று பணத்தைப் புரட்டுவோம், சூரங்குடிகாரனப் பார்க்கண்டாம்..." என்று வீட்டு முற்றத்தில் கிடந்த தேங்காய் கூடையை நோக்கி கையைச் நீட்டியப்படி கணவரிடம் சொன்னாள்.  சுப்பிரமணியும்தான்  எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

நேரம் இருட்டி விட்டது. வள்ளிம்மை வீட்டுக்குள் சென்று உள்ளறையிலும், வாசலிலும் விளக்கைப் போட்டு விட்டு, சமையல் கட்டுக்குள் சென்றாள்.

சற்று நேரத்திலெல்லாம் சரஸ்வதியப்பன் வீட்டுக்குள் வந்து, "தேங்காய் வியாபாரியை ஒருக்கக் கூட விளித்துப் பாருல..." என்றார்.

சுப்பிரமணி செல்போனை எடுத்து மீண்டும் தேய்காய் வியாபாரியின் எண்ணில் அழைப்பு விடுத்தான்.

இந்த நம்பர் 'சுவிட் ஆப்' செய்யப்பட்டுள்ளது என்று பதில் வந்தது.

சற்று நேரத்திலெல்லாம் "வா.. வந்து கஞ்சி குடி..." என்றாள் வள்ளிம்மை, சுப்பிரமணியின் கையைப் பிடித்துக் கொண்டு.

"கஞ்சியும் வேண்டாம்... ஒண்ணும் வேண்டாம்..."

வள்ளியம்மைக்கு ஆத்திரம் வந்து விட்டது. மூலையில் கிடந்த  பிரம்புக் குச்சியை எடுத்து அவனது தோள்பட்டையில் அடி.. அடி என இரண்டு, மூன்று அடி அடித்து விட்டாள்...

சரஸ்வதியப்பன் குறுக்கே பாய்ந்து "என்னத்துக்கு  பிள்ளையப்  போட்டு இந்த அடி அடிக்கிய..." என அவளது கையைப் பிடித்துக்  கொண்டார்.

வள்ளியம்மை குச்சியைப் போட்டு விட்டு, "நாளக்கு பணத்தைப் பொரட்டியிருலாம் என்றால் கேட்க  வேண்டாமா.. என்ன புள்ள இது..." என்று புலம்பியவாறு சமையல் கட்டுக்குள் மீண்டும் சென்றாள்.

சமையல் கட்டிலிருந்து "நீங்க கஞ்சி குடிக்கிதியளா..." என்ற குரல் வந்தது

"இல்ல.. எனக்கும் வேண்டாம்.." என்றார் சரஸ்வதியப்பன்.

ரஸ்வதியப்பனுக்கு தூக்கம் பிடிபடவில்லை. பிரம்புநார்க் கட்டிலில் புரண்டு, புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். கோழிக்கூட்டைப் போன்ற தாழ்ந்த காங்கிரீட் கூரை வேறு வெக்கையை இறக்கிக் கொண்டிருந்தது.   எழுந்து வீட்டின் பின்பக்கம் சென்று சிறுநீர் கழித்து விட்டு  வரலாமென்று நினைத்து  நடு அறையைக் கடந்த போது பேரன் சுப்பிரமணி  தூங்காமல் படுக்கையில்  அமர்ந்திருப்பதைப் பார்த்து, 
"இன்னும் ஒறக்கம் வரல்லையா..." என்று கேட்டவாறே கடந்து சென்றார். அவர் பின்பக்கம் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது வள்ளியம்மை அவன் அருகில் அமர்ந்து கொண்டு "படுத்து  ஒறங்கு காலம்பொற.. பாத்துக் கொள்ளலாம்..." என்று சொல்லிக் கொண்டிருந்தாள். சரஸ்வதியப்பன் மீண்டும் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டார். தூக்கம் வந்தது.

திகாலையில், "பேரனைக் காணல... பிள்ளையக்  காணல்ல..." என்று சத்தமிட்டவாறே  சரஸ்வதியப்பனை தட்டி   எழுப்பினாள் வள்ளியம்மை.  பதறி எழுந்தார் சரஸ்வதியப்பன்.
"பேரனைக் காணல்ல.." மீண்டும் சத்தமிட்டாள் வள்ளியம்மை.

"வீட்டுக்கு பெறத்தால எங்கயாவது போயிருப்பான் பாத்தியா..."
"பார்த்தேன் காணல்ல..."
அவருக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
எழுந்து முன்வாசலைத் திறந்து தெருவைப் பார்த்தார். தெருவிளக்கு மட்டுமே மங்கிய வெளிச்சத்தை தெளித்துக் கொண்டிருந்தது. சட்டென்று வீட்டின் பின்பக்கம் சென்று பானையில் இருந்த தண்ணீரை அள்ளி முகத்தைக் கழுவிவி்ட்டு டவ்வலையெடுத்து கழுத்தைச் சுற்றி போட்டுக் கொண்டு தெருவுக்கு  வந்தார். வள்ளியம்மையும் பின்னால் வந்து கொண்டிருந்தாள்.
கிணற்றடி வீட்டுக்காரி தூக்குவாளியுடன் நடந்து வருவது தெரிந்தது.

"பேரனைக் காணல்ல.. அந்த பக்கம் எங்கயாவது நிக்கியானா..." சரஸ்வதியப்பன் அவளிடம் கேட்டார்.
"இல்ல.. நான் பாக்கல்ல. நேரம கிணறுல்ல தொப்புண்ணு ஒரு சத்தம் கேட்டுது..." என்று சொல்லிவிட்டு நடந்தாள் அவள்.
வள்ளியம்மை கிணற்றை நோக்கி ஓட முயன்றாள்... சரஸ்வதியப்பன் அவள் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தி,  "வேண்டாம் அப்பிடியொண்ணும் இருக்காது... தேங்காயோ என்னமோ விழுந்திருக்கும்... இல்லையிண்ணா அவ ஒறக்கத்துல கனவு கண்டிருப்பா" என்றார்.

"காப்பிக்கடைக்கு போயிருப்பானா..." வள்ளியம்மை கேட்டாள்

"அந்தப் பழக்கம் இல்லியே..." சரஸ்வதியப்பன் திரும்பச் சென்னார்.

"அம்மைக்க வீட்டுக்கு ஏதாவது வண்டி ஏறியிருப்பானா...?"

"கேட்டுப்பார்க்கலாம்..." என்று சொல்லிய சரஸ்வதியப்பன் தெருவைத் தாண்டி சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினார். அரசமரத்தடி பஸ் நிறுத்தத்தில்  கண்களை அலைய  விட்டார்.
இல்லை. அவனைக் காணவில்லை.
அங்கிருந்த காப்பிக்  கடையில் விசாரித்தார். யாரும் பார்த்திருக்கவில்லை.  எங்கே போயிருப்பான்? விடியத் தொடங்கியது. நேராக வீட்டிற்கு வந்து, செல்போனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு மகளுக்கு அழைப்பு விடுப்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தார். இங்கிருந்து முதல் பஸ்சில் ஏறிச் சென்றாலும்  அவள் வீட்டுக்குச் செல்ல குறைந்தது 3 மணி நேரமாவது ஆகும் என்று கணக்குப் போட்டார். பின்னர் எதுக்கும் தகவலையாவது சொல்லிவைப்போம் என நினைத்து எண்களை அழுத்தினார்.
மறுமுனையில் மகளின் குரல் கேட்டது. விஷயத்தைச் சொன்னார். ஒரு சில விநாடிகள் எதிர்முனையில் பதிலில்லை.
"பதறாத.. எப்பிடியும் அங்க வருவதா இருந்தால் 9 மணி வரைக்கும் ஆகுமில்லையா... வந்தான்னா ஒடனே போன் போடு..." என்று  சொல்லிக் கொண்டு இணைப்பைத் துண்டித்து விட்டு முன்வாசல் நடையில் அமர்ந்து கொண்டார். வள்ளியம்மை உள்ளறையில், கட்டிலில் அமர்ந்திருந்தாள். பேரனை அடித்த குற்ற உணர்ச்சி அவளை அழவைத்திருந்தது.

வெயில் முற்றத்தில் சுள்ளென்று விழத் தொடங்கியது. செய்தி காட்டுத் தீயாக பரவியிருந்தது. குடியிருப்பு ஆட்களும், வெளியாட்களும் "வந்தானா... வந்தானா..." எனக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்... சரஸ்வதியப்பனும் "வரவில்லை..காணவில்லை..."  என்று பதில்  சொல்லிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையே மகளிடமிருந்தும் "இங்கும் வரவில்லை..."  என்ற தகவல் வந்தது.
சரஸ்வதியப்பனுக்கு வருத்தம் ஒருபுறம் ஆத்திரம் ஒருபுறமாக வந்து கொண்டிருந்தது.
'ஆயிரம் ரூபா அந்த சீட்டுக்காரி தந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா...'  என்று ஆவேசம் வந்தது.

அப்படியிருக்கும் போதுதான்,
"வள்ளி... அந்த அருவாய எடு.." என்றார் ஆவேசத்துடன்.
"என்னத்துக்கு..." என்றாள் வள்ளியம்மை.
"வட்டிக்காரிக்கிட்ட  நாக்கப்பிடுங்கிறது மாதிரி ஒண்ணு கேக்கணும்..." 
"நான் எடுத்துத் தரமாட்டேன்..." என்றாள் வள்ளியம்மை.
நடையிலிருந்து அப்படியே எம்பிக்குதித்து அருவா வைத்திருக்கும் இடமான பின்னறை சன்னலுக்கு ஓடி,  அருவாவைத் துளாவினார்.  அருவா கையில் சிக்கவில்லை. வேறு எங்கெல்லாமோ தேடினார்.  அருவா சிக்கவில்லை.  புரிந்து விட்டது.
முன்னறைக்கு வந்து "அருவாவைக் காணல்ல..." என்றார் சத்தமாக
"அப்ப காட்டுக்குப் போயிருப்பானா...?" என்றாள் வள்ளியம்மை..
சற்று நிதானமான சரஸ்வதியப்பன்,  "ஒற்றைக்கு காட்டுப்போய் அவனுக்குப்  பழக்கமில்லியே..." என்றார்.
"ஆமாம்.." என்றாள் வள்ளியம்மை.
வீட்டு முற்றத்தில் ஆட்கள் கூடிக்கிடந்தனர். சிலர் முற்றத்து ஈத்தல் கூட்டத்திலிருந்து இலைகளை பறிப்பதும், கிழித்து  எறிவதுமாக இருந்தார்கள்.
மகளிடமிருந்து "இன்னும் இங்கே வரல்ல... அங்கே வந்திட்டானா..." என்று பதிலும், கேள்வியுமாக அழைப்புகள் வந்து  கொண்டிருந்தன. அவள் பதறித் துடித்துக் கொண்டிருப்பதும் பேச்சில் தெரிந்தது. நேரம் போய்க்கொண்டே இருந்தது.  குடியிருப்பிலிருந்து  யாரெல்லாம் காட்டுக்குப்  போயிருக்கிறார்கள் என்று விசாரிக்கத் தொடங்கினார் சரஸ்வதியப்பன்.  ஐந்தாறு பேர்களின் பெயர்கள் சொல்லப்பட்டன. இதற்கிடையில் வீட்டு வாசலில் கூடியிருந்தவர்களில் சிலர்  காடு நோக்கி விரைய ஆயத்தமாகினர்.

அப்போது தான் கிணற்றடி வீட்டுக்காரி மூச்சிறைத்துக் கொண்டு ஓடி வந்தாள்..
"சரஸ்வதியண்ணே உனக்கப் பேரன், பெரம்பு கம்பு வெட்டிட்டு வரும் போது காடன்மாரு  பிடிச்சு ரேஞ்ச் ஆபீசுக்கு கொண்டு போயிட்டிருக்கினும்..." என்றாள் மூச்சை நிறுத்தாமலேயே...

சரஸ்வதியப்பனும், வள்ளியம்மையும், வீட்டு வாசலில் திரண்டு நின்ற கூட்டமும் விக்கித்துப் போனது.

சரஸ்வதியப்பன் உடுத்தியிருந்த துணியோடு ரேஞ்ச் ஆபிஸ் நோக்கி ஓடத் தொடங்கினார். வள்ளியம்மையும் அவர் பின்னால் கதறிக் கொண்டு ஓடலானாள். வாசலில் திண்டிருந்தவர்களும் அவர்களின் பின்னே ஓடலாயினர்.

"ஐயோ.. இனி காடன்மாரு எத்தனை ஆயிரம் ரூவா பைன் கட்டச் சொல்லுதானுவளோ...? யாருக்கிட்ட  ரூவா வாங்குவேன்... ஒரு வழியும் இல்லாதவானாக்கும் சொன்னாலோ இல்லையிண்ணா, நான் அந்தக் காலத்துலே எம்ஜிஆருக்கே மாலை போட்டவனாக்குமுண்ணு சொன்னாலோ யாரு கேட்பா...?" புலம்பிக் கொண்டே ஓடலானார் சரஸ்வதியப்பன். ரேஞ்ச் ஆபிஸ் அவரது குடியிருப்புக்கு சற்றுத்  தொலைவில் தான் இருக்கிறது.

ரேஞ்ச் ஆபிஸுக்கு வந்துவிட்டார்கள் சரஸ்வதியப்பனும், வள்ளியம்மையும், குடியிருப்புக்காரர்களும்.  ஆபிஸ் வளாகத்தில்  இரண்டு மூன்று ஜீப்புகள் நின்று கொண்டிருந்தன.  சப்பைக் தொப்பியும்,  சீருடையும் அணிந்த காடர்கள் நிறைய பேர் அங்குமிங்குமாக  நின்று கொண்டிருந்தனர்.

"ஓய்.. பெரிசு... இண்ணக்கி பெரிய ஆபிசரு  விசிட்  வருவாருண்ணு விடியக்காலமே தகவல் சொன்னமே... இந்தப் பொடிப்பயல காட்டுக்கு விட்டிருக்கீரு.. அதுவும் பெரம்பு வெட்ட.. இனி எத்தனை ஆயிரம்  ரூபா ஃபைன் வருமோ..."   காடர் ஒருவர்  சொல்லிக் கொண்டிருந்தார்.

சரஸ்வதியப்பனுக்கு நடுக்கம் வந்து விட்டது.

"யாரு பிடிச்சா...எங்கே வச்சிருக்கீங்க..." சற்று நடுக்கத்துடனே  திருப்பிக் கேட்டார்..

"டிஎப்ஓவாக்கும் (மாவட்ட வன அதிகாரி) பிடிச்சது. உள்ள எட்டிப்பாரும்.. அதோ இருக்கான் பையன்..."
சரஸ்வதியப்பன் வாசல் நடையில் ஏறி மெல்ல எட்டிப்பார்த்தார்... வேலியில் சிக்கிய மிளா குட்டியைப் போல் பயந்து போய் தரையில் அமர்ந்திருந்தான் சுப்பிரமணி. தாத்தனைப் பார்த்தபோது கண்கள் இன்னும் நிறைந்தன. சரஸ்வதியப்பன் கைகளை உயர்த்திக்  சைகையால்  பயப்படாதே என்று செல்லிவிட்டு வெளியில் வந்தார்.
வெளியில் சலசலப்பு மிகுந்திருந்தது. காடர் ஒருவர் அதோ பாரும் அவன் வெட்டின பெரம்புக் கம்புகளும் கொண்டு வந்த அருவாயும்  என்று ஜீப்பிலிருந்து இறக்கிப் போடப்பட்டிருந்த பிரம்புக் கம்புகளையும் அருவாவையும் காண்பித்தார். ஒரு தேங்காய்க்குட்டை செய்யப் போதுமானதாக இருந்தன அந்தப் பிரம்புக்  கம்புகள்.

அப்போது  வெளியே வந்த  இன்னொரு காடர்  "இங்கே என்ன சத்தம் டிஎப்ஓ உள்ள இருக்காரு தெரியுமில்லையா...?"  என்று கூட்டத்தினை நோக்கி சத்தமிட்டார். கூட்டம் அமைதியானது. அப்போது மற்ரொருவர்  வந்து சரஸ்வதியப்பனையும், வள்ளிம்மையும் உள்ளே வருமாறு அழைத்து, டிஎப்ஓ இருக்கும் அறைக்குச் செல்லுமாறு சைகை செய்தார்.  இருவரும் அதனை எதிர்பார்த்து நின்றிந்த நிலையில் விறுவிறுப்பாய் உள்ள சென்று டிஎப்ஓவின் முன்னே பவ்யமாய் நின்று கொண்டனர். இளம் வயதுக்காரராய் இருந்தார் டிஎப்ஓ. ஜீன்ஸ் பேன்டும்,  அரைக்கை சட்டையும் அணிந்திருந்தார். முகத்தில் இறுக்கம் தெரிந்தது.

"யாரு... பேரனா..."
"ஆமா ஐயா..."
"தப்பனார் வரல்லயா.."
"இல்லை.. வரல்ல ஐயா..."
"ம்ம்ம்...பள்ளிக்கு போற வயசுல்ல காட்டுக்கு விட்டுருங்கீங்க.. அப்படித்தானே..."
"இல்லை ஐயா..."
"என்ன இல்லை... எங்களப் பாத்தவுடனே பிரம்புக் கம்புகளப் போட்டுக்கிட்டு ஓடுறான்... துரத்திப் பிடிச்சிருக்கோம்...பிரம்பு வெட்டக் கூடாதுண்ணு தெரியுமில்லையா...  இரண்டாயிரம் ரூபாய் ஃபைன். பணத்தக்  கட்டுக்கிட்டு பையனக் கூட்டிக்கிட்டு போங்க..." என்றார்.
"ஒரு ஆயிரம் ரூவா  இல்லாததால்தான் ஐயா எங்களுக்கே தெரியாமா காட்டுக்கு வந்து  பெரம்பு வெட்டியிருக்கான்..."
"என்ன சொன்னீரு..."
"ஆமா ஐயா.. பள்ளிக்கூடத்திலுல  டூரு  போகணுமிண்ணு ஆயிரம் ரூவா கேட்டான். எங்ககிட்ட பணம் இல்லை.  யாருகிட்டயெல்லாமோ  கேட்டுப்பாத்தோம் கிடைக்கல்ல.. அதனால் எங்களுக்கே தெரியாமா  காட்டுக்குப் பெரம்பு வெட்ட வந்திருக்கான்..."

ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார் டிஎப்ஓ. பின்னர்
அருகில் நின்ற ஊழியரிடம் சைகை செய்தார். அந்த ஊழியர் சுப்பிரமணியை கூட்டி வந்து அவரது அருகில் நிறுத்தினார். அவனது கை, கால் முட்டிகளில் ரத்தம் கசிந்திருந்ததைக் கண்ட வள்ளியம்மைக்கு கண்கள் கசிந்தன. சேலைத் தலைப்பால் கண்களை  ஒற்றிக் கொண்டாள்.
டிஎப்ஓ, சுப்பிரமணியை அருகில் வருமாறு சைகை செய்து,  பக்கத்தில்  நிறுத்திக்  கொண்டார்.

"ஆயிரம் ரூபாய் இல்லாதததால ஒத்தைக்கு காட்டுக்கு வந்து பெரம்பு வெட்ற...  என்ன தைரியம்..? இப்ப இரண்டாயிரம் ரூபாய் பைன் கட்டணும் என்ன செய்யப்போற...?"

சுப்பிரமணி எதுவும் பேசாமல் தலையைக் கவிழ்த்தவாறு நின்றான்.

"கேட்கிறேனில்லியா.. ஃபைன் கட்டுறியா...?" என்றார் மறுபடியும்.

"பணம் இல்லை..." முனங்கலாய்ச் சொன்னான்.
"அப்ப வீட்டுக்குப் போகமுடியாது ஒக்கேவா..?" என்றார்  டிஎப்ஓ, அவனது முகத்தைப் பார்த்து.

சுப்பிரமணிக்கு அழுகை வரும் போல் இருந்தது.  அவன்,  தாத்தனின் முகத்தைப் பார்த்தான்.  தாத்தனும், ஆத்தாவும் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தனர்.

டிஎப்ஓ, இப்போது சுப்பிரமணியின் தோளைப் பிடித்து இன்னும் தனக்கு நெருக்கமாக நிறுத்திக் கொண்டார். அவரது முகத்திலிருந்த  இறுக்கம் தணிந்திருந்து போலத் தெரிந்தது.

"சரி... ஃபைன் எதுவும் கட்ட வேண்டாம்... அப்படியிண்ணா பத்து பிரம்படி  வாங்கிக்கிறியா...?"

சுப்பிரமணி, மான் போல டிஎப்ஓவின் முகத்தைப் பார்த்தான். உடல் லேசாக நடுங்கியது.  

டிஎப்ஓ இப்போது அவனது நாடியை தனது கையால் பிடித்து உயர்த்திக் கொண்டு சிறிது புன்னகைத்தார். பின்பு,  
"நல்லாப் படிப்பாயா...?" என்றார்.
"ம்..." நிதானமானான் சுப்பிரமணி.
"என்ன படிக்கிற..."
"பதினொண்ணு.."
"டூரு போறதுண்ணா அவ்வளவு உற்சாகம் அப்படித்தானே..."
சுப்பிரமணி பதில் எதுவும் சொல்லாமல் நின்றான். அவனது முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த  டிஎப்ஓ, பின்னர்
"சரி...சரி... ஃபைன் எதுவும் கட்ட வேண்டாம்.... பிரம்படியும் கிடையாது. காட்டுக்கு பிரம்பு வெட்ட வரக்கூடாது ஓக்கேவா..." என்றார். பின்பு சரஸ்வதியப்பனின் முகத்தைப் பார்த்து,  பிரம்பும், மூங்கிலும் காட்டுத் தேவதையின் தளபதிகளாக்கும்..." என்று சொல்லிவிட்டு, 
தலையை ஆட்டியபடியே,  'செல்லுங்கள்...' என்று சைகை செய்தார்.

சுப்பிரமணிக்கு இப்போதான் மூச்சு வந்தது போல் இருந்தது. 

சரஸ்வதியப்பனும்.. வள்ளிம்மையும் குனிந்து "நன்றிங்க ஐயா..." என்று  மறுமொழி சொல்லிவிட்டு, சுப்பிரமணியை கையில் பிடித்துக் கொண்டு வெளியே கிளம்ப
எத்தணித்த போது,
"நில்லுங்கள்..." என்றார் டிஎப்ஓ.
மூவரும்,  திரும்பி அவரது முகத்தை படபடப்புடன் பார்த்தனர். இருக்கையை விட்டு எழுந்த டிஎப்ஓ.  ஜீன்ஸ்பேன்டின்  பாக்கெட்டில் கையை விட்டு மணிப்பர்சை  எடுத்து, அதிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய்த் தாள்களை எடுத்து "டூருக்கு வெச்சிக்க"  என்று கூறியபடியே சுப்பிரமணியின் கையில் திணித்தார்.  

வள்ளியம்மைக்கு அழுகையாய் வந்தது.

குடியிருப்புக்கு  வந்த  போது  சூரங்குடி தேங்காய் வியாபாரி வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். அவரது மடியும் கனமாய் இருந்தது. "இன்னக்கி  காலையில தான் பணம் கையில வந்தது..." என்ற அவரது பேச்சுக்கு சரஸ்வதியப்பன் செவிகொடுக்கவில்லை.  வீட்டுக்குள் ஒலியெழுப்பிக் கொண்டேயிருந்த செல்போனைக்  கையில் எடுத்த சரஸ்வதியப்பன்  "கிடைச்சிட்டான்.." என்றார் மகளிடம். 
சுப்பிரமணி, வள்ளியம்மையிடம் "பள்ளிக்கூடத்துல டூருக்கு பணம் குடுக்கணும்" என்று கிசுகிசுத்துக் கொண்டிருந்தான்.  முற்றத்து ஈத்தல் கூட்டத்தில், குருத்திலைகள் வெயில் பட்டு மினுங்கிக் கொண்டிருந்தன.